×

கர்நாடகாவில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு : தனியார் பேருந்துகள்,வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

பெங்களூரு : கர்நாடகாவில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களுருவில் தனியார் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகாவிலும் மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கான திட்டத்தை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கடந்த ஜூன் 11ம் தேதி தொடங்கி வைத்தார். மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் என்றும் தனியார் போக்குவரத்து சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் இலவச பேருந்து திட்டத்தில் தனியார் பேருந்துகளை சேர்த்தால் அரசுக்கு கூடுதலாக 5,500 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறி அந்த கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது. இந்த நிலையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் இன்று ஒரு நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என சுமார் 10 லட்சம் வாகன உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் தனியார் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

The post கர்நாடகாவில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு : தனியார் பேருந்துகள்,வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Dinakaran ,
× RELATED கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய...